சென்னை:

விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டு உள்ளது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று வேலைநாட்களாக இருந்த நிலையில், தமிழகஅரசு அன்றைய தினத்தையும் விடுமுறை தினமாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை பல தனியார் பள்ளிகள் இயங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தினால் அப்பள்ளிக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாள்களில் பள்ளிகள் இயங்குகின்றனவா என கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள் என்றும், இயக்கும் பட்சத்தில் அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இயங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தரலாம் என்றும் அறிவித்து உள்ளது.