சென்னை:

மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சூசகமாக பேசினார்.

அப்போது,  தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யாரோ, அந்த கட்சியே  மத்தியில் ஆட்சிக்கு வரவே அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுகவில் உள்விளையாட்டுக்களை விளையாடி வருகிறது பாஜக. முதலில் அதிமுவை உடைத்து, இரட்டை இலையை முடக்கியது. பின்னர் பிரிந்தவர்களை இணைத்து அவர்களை தங்களது கைக்குள் வைத்து அரசியல் செய்து வருகிறது.

இதற்கிடையில், நேற்று பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணிக்காக பாஜக கதவை திறந்து வைத்துள்ளது என்றும், கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் கொள்கையை கடைபிடிப்பதாகவும்  தெரிவித்தார்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது முதலில் அதிமுக அதரவு வழங்கியது.. அதுபோல வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தும் அதிமுகதான். பின்னர் திமுக ஆதரவுடன் வாஜ்பாய் மீண்டும் ஆட்சி ஏறினார்.

இரு கட்சிகளுடன் பாஜக ஆட்சி செய்துள்ள நிலையில், மோடி இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியே மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் தங்களுடைய எண்ணம் என்றும் கூறினார்.

மேலும்,  பொங்கல் திருநாளை அனைவரும் கொண்டாடவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படுவதாக குறிப்பிட்டவர், அ.தி.மு.க அரசுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

எடப்பாடியின் பேச்சை பார்க்கும்போது, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக தெரிகிறது. ஏற்கனவே காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக பாஜக கூட்டணியையே நாடும் என்பதும் தெளிவாகி உள்ளது.