டில்லி
கடந்த ஆண்டுகளில் நிதி நிலை அறிக்கையை விட அதிகம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும் என கணக்கு தணிக்கை துறை கூறி உள்ளது.
மத்திய அரசு அறிவிக்கும் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு துறையிலும் நிதிப் பற்றாக்குறை பற்றி குறிப்பிடப் படுவது வழக்கமாகும். அந்தப் பற்றாக்குறையை சரி செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்கும். பல நேரங்களில் பற்றாக்குறை முழுமையாக சரி செய்யப்படாவிட்டாலும் அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கைகள் உதவும்.
கணக்கு தணிக்கை துறை கடந்த கணக்கு ஆண்டு 2016-17 ஆம் வருடத்திய அரசின் வரவு செலவு கணக்கை தணிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பல துறைகளில் உள்ள பற்றாக்குறையை போக்க சரியான நடவடிக்கை எடுக்க முடியாத அரசு அதை கடன் வாங்கி சமன் செய்துள்ளது. இதனால் அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.
உதாரணமாக விவசாயத்துறையில் உரம் குறித்த இனத்திம் பற்றாக்குறைக்கு வங்கியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிதி பெறப்பட்டுள்ளது. அதை போல விவசாயத் துறையில் நீர்பாசனத்துக்கான பற்றாக்குறை நாபார்ட் வங்கியின் கடன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. உணவுக் கட்டுப்பாட்டு துறையின் பற்றாக்குறைக்காக உணவுக் கழகத்திடம் இருந்து பொருட்களாக கடன் பெறப்பட்டுள்ளது.
அதே போல் ரெயில்வே, மின்சாரம் ஆகிய முதலீட்டு செலவுகளுக்காகவும் கடன்கள் பெறப்பட்டுள்ளன. இந்த செலவுகள் அனைத்துமே நிதிநிலை அறிக்கையில் காணப்பட்டதை விட அதிகமாகி உள்ளன. உதாரணமாக உரத்துக்கு 2016-17ஆம் வருடம் ரூ.78,335 கோடியாக இருந்த பற்றாக்குறை அடுத்த வருடம் ரூ.84,203 கோடியாக அதிகரித்துள்ளது. அதைத் தவிர செலவினங்க:ளாக ரூ. 70,100 கோடி கணக்கில் உள்ளது.
இவ்வாறு பற்றாக்குறை வருடா வருடம் அதிகரித்து வருவதும் அரசுத்துறைகளின் கடன் தொகை அதிகரித்து வருவதையும் அரசு நிதிநிலை அறிக்கையில் கவனம் கொள்ள வேண்டும்” என கணக்கு தணிக்கை அலுவலரின் அறிக்கை தெரிவித்துள்ளது.