புதுடெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் 30 சதவீத வாக்குச் சாவடிகளில் அமல் படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹரியானா மாநில அரசின் முன்னாள் செயலர் எம்.ஜி. தேவசகாயம், இத்தாலிக்கான முன்னாள் தூதுவர் கே.பி. ஃ«பியான், அகில இந்திய வங்கிக் கூட்டமைப்பின் முன்னாள் செயலர் தாமஸ் ஃரான்கோ ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது, யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிந்தால், வாக்காளர்கள் திருப்பதியடைவார்கள். வாக்காளர்களும் தங்கள் வாக்கு யாருக்கு சென்றது என்பதை உறுதி செய்துகொள்ள இது உதவும்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது அரசியல் சாசனத்தின் 14- வது பிரிவுக்கு எதிரானது.
கடந்த 2013&ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் ராஜ் கோகாய் (தற்போதைய தலைமை நீதிபதி) கொண்ட டிவிஷன் பெஞ்ச் இது தொடர்பாக தீர்ப்பளித்துள்ளது.
அதில், வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்படாமல் இருக்க இந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை சரியானதாக இருக்கும். எனவே இந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்தலாம் என்று கூறியிருந்தது.
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலிலும் தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியில் மட்டுமே ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. இப்படி தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியில் அமல்படுத்தினால், முறைகேட்டையோ அல்லது பாரபட்சமாக நடப்பதையோ கண்டறிய முடியாது.
எனவே ஒரு தொகுதிக்கு குறைந்தது 30 சதவீதம் வாக்குச் சாவடிகளிலாவது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும்.
தேர்தல் நடவடிக்கை சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருப்பதாகக் கூறினால் மட்டும் போதாது. அதை கண் எதிரே எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்று மனுதாரகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதில் தரும் வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.