பெங்களூரு

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிவித்த எந்த ஒரு ஆர்டரும் தங்களுக்கு வரவில்லை என அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது

.

அரசு நிறுவனமான எச் ஏ எல் நிறுவனம் முதலில் ரஃபேல் ரக விமானம் தயாரிப்பதாக இருந்தது. அதன் பிறகு அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன், “எச் ஏ எல் நிறுவனத்திடம் இருந்து அரசு தற்போது சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள்முதல் செய்ய உள்ளது.

அவை ரூ. 50000 கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் படை விமானங்கள், ரூ.3000 கோடி மதிப்ப்பில் 15 காம்பாட் ஹெலிகாப்டர்கள், அத்துடன் ரூ.20000 கோடிக்கு மற்ற ரக 200 ஹெலிகாப்டர்கள், ரூ. 3400 கொடிக்கு 19 போக்குவரத்து விமானங்கள், ரூ.15000 கோடிக்கு பயணிகள் ஹெலிகாப்டர்கள், மற்றும் ரூ.8400 கோடிக்கு விமான எஞ்சின்கள் ஆகும்.

இதற்கான முன் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மோடி அரசு இவ்வாறு ரூ. 1 லட்சம் கோடிக்கான உத்தரவை வழங்கி உள்ளது. இதற்கான பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் முடிவடைந்த பின் நிறுவனத்த்துக்கு உற்பத்தியை தொடங்க அரசு உத்தரவு அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவே பணம் இல்லாமல் உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியது.

எச் ஏ எல் நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத ஊழியர் ஒருவர் “இதுவரை மேலே கூறப்பட்ட எதற்கும் கொள்முதல் உத்தரவு அளிக்கப்படவில்லை.  அது மட்டுமின்றி முன் அனுமதியின் அடிப்படையில் கொள்முதல் உத்தரவு பிறப்பிக்க முடியாது.,

மேலும் அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை

ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு இந்திய விமானப்படை தர வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. அது வராததால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க நிறுவனம் ரூ. 1000 கோடி கடன் வாங்கும் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.