டில்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 10ந்தேதிக்குள் அமைக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என அழைக்கப்படும் சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 29ந்தேதி நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, அயோத்தி வழக்கு ஜனவரியில் இருந்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் இடம் அமர்வு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வழக்கு குறித்து விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு வரும் 10ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.
கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதி அமைந்திருந்த 2.7 ஏக்கர் இடம் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறத. ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியில் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள இடம் சன்னி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத அமைப்புகள், அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் உச்சநீதி மனற்த்தில் மேல் முறையீடு செய்தன. மொத்தம் 14 மனுக்கள் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணை ஜனவரியில் இருந்து தொடர்ந்து நடை பெறும் என்றும், இதற்காக புதிய அமர்வு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து விசாரணை நடத்தும் நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் 10ம் தேதிக்குள் அமைக்கும் என்ற நீதிபதிகள், வரும் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.