திருவனந்தபுரம்:

பரிமலை சன்னிதானத்திற்குள் 2  பெண்களை கேரள மாநில அரசு நள்ளிரவு அழைத்துச் சென்ற விவகாரம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் தலைவிரித்தாடுகின்றன.இதில் சிக்கி  55 வயது முதியவர் பலியாகி உள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம்   பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று  நடைபெற்ற வன்முறையின்போது கற்கல் வீசப்பட்டதில் காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 3:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்தை அடைந்த என்ற இந்த இரண்டு பெண்களும், கோவில் ஊழியர்கள் செல்லும் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் பெருமையாக அறிவித்தார்.

இதன் காரணமாக மேலும் கோபமடைந்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். பல இடங்களில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதன் காரணமாக பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்தது.

அதைத்தொடர்ந்து  இன்று கேரளாவில் முழு கடையடைப்பிற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள்   அழைப்பு விடுத்தன. பா.ஜ.கவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கூட்டணி இன்றைய தினத்தை  கருப்பு தினமாக அனுசரிப்பதாக கூறி உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் முழு அடைப்பு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கேரள தலைமையை செயலகத்தை முற்றுகையிட்டு பாஜக உள்பட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோழிக்கோட்டில்  போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதாகவும், சாலையில் டயர்கள் கொளுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கேரளாவில் பதற்றம் நீடித்து வருகிறது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தும் வருகின்றனர்.

கேரளாவில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக  கோழிக்கோடு, கண்ணூர், மகாத்மா காந்தி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.