சென்னை:
திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.
இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற டிடிவி தினகரன், கவர்னர் உரை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கவர்னர் உரையில் ஒன்றும் இல்லை என்றும், வானத்துக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.
ஆளுநர் உரை ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறது; அதில் கொள்கை எதுவும் இல்லை. பட்ஜெட்டை பிரதிபலிப்பதாக ஆளுநர் உரை அமைய வேண்டும். ஆனால் அப்படி அமையவில்லை.
மேலும், பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுப்பதாக அறிவித்திருப்பது தேர்தலை மனதில் கொண்டுதான் அறிவித்திருக்கிறார்கள் என்றவர், எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
ஏற்ககனவே ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக திமுக தோல்வியை தழுவியது போலவே, திருவாரூர் தொகுதியில் அதிமுக தோல்வியைத் தழுவுவும் என்றவர், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என்றார்.
திருவாரூரில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த வரும் நான்காம் தேதி அறிவிக்கப் படுவார் என்றும், அமமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.
டிடிவியின் அதிரடி பேட்டி தமிழக அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், மக்களை கவரும் வகையில் பல்வேறு வகையான உதவிகள் வழங்கிய நிலையில் பணமும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோல கடைசி நேரத்தில் ஜெ. சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு அதிரடி காட்டியும், தொகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவில் உள்ள வணிகர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது போல பணம் விநியோகம் செய்து அபார வெற்றி பெற்றதைபோல திருவாரூரிலும் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.