தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவது குறித்து வரும் 7ந்தேதி அறிவிக்கப்படும் என்று  போராட்டக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வகையில் தமிழக அரசு  சிறப்புச்சட்டம் இயற்றாவிட்டால் ஜனவரி 7-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் குறித்த  அறிவிப்பு வெளியாகும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு கூறி உள்ளார்.

பல வருட மக்களின் போராட்டத்தை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய காட்டு மிராண்டித் தனமான துப்பாக்கி சூட்டில்  13 பேரின் உயிர்களை பலிவாங்கிய நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு மூடி சீல் வைத்தது. ஆனால், மத்தியஅரசின் ஆதரவுடன் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டு உள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் போராட்டம் தலைதூக்கி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப் பாளர் பாத்திமா பாபு கூறியதாவது,

“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாநகரில் மக்களின் மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைத்து வரும் சுற்றுச்சூழல் ஒட்டு மொத்தமாக அழித்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இன்று வரை எங்களுக்கு அதற்கான ஒரு முறையான தீர்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் சமீப காலமாக இந்த மனித உரிமை காப்பாளர்கள் மீது விசாரணை என்ற பெயரில் நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

தூத்துக்குடியில் வாட்ஸ்அப் குழுக்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செய்தி பரப்பும் உறுப்பினர்கள் மீது கூட காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் தனிமனித உரிமைகளில் தலையிடுவது அதிகரித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு சிறப்பு தீர்மானம் அல்லது சிறப்பு சட்டம் இயற்றாவிட்டால் வரும் ஜனவரி  7-ம் தேதி தமிழகமே திரும்பி பார்க்கும் அளவில் போராட்ட அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.