சென்னை:

துரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறித்து உள்ளது. ஏற்கனவே இருந்த துணைவேந்தர் மீது புகார்கள் கூறப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது புதிய துணைவேந்தரை ஆளுநர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருஷ்ணனை நியமனம் செய்துள்ளார். அவர் பதவி ஏற்றதும் முதல் மூன்றாண்டுகள் அப்பதவியில் இருப்பார்.

கிருஷ்ணன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துள்ளார். 28 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றுள்ளார். பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்திய அனுபவம் பெற்றுள்ளார்.

மேலும் சர்வதேச கருத்தரங்குகளில் 128 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 60 ஆய்வுக் கட்டுரைகளை பல்கலைகழக மானியக் குழுவின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை மீது நிர்மலா தேவி விவகாரம் உள்பட அவர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அவரது நியமனத்தை ரத்து  செய்து கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம்! ஆளுநர் அறிவிப்பு