டில்லி:
விவசாய பொருட்களை கையாளும் சரக்கு கப்பல் உரிமத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினர் இந்திய கடலலோரப் பகுதிகளில் சரக்கு கப்பல்களை இயக்க கடலோர வர்த்தக இயக்குனரகத்தில் உரிமம் பெற வேண்டும். வேளாண் பொருட்கள், மீன், கால்நடை பொருட்கள், பண்ணை பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கப்பலில் உள்ள பொருட்களில் 50 சதவீத்திற்கு மேல் இத்தகைய வேளாண், மீன், பண்ணை பொருட்கள் இருந்தால் அதற்கு உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்களும் சார்டர் கப்பல்களை இயக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகவலை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இந்த வகையில் வேளாண், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பொருட்கள் ஆகிய 4 வகையான சரக்குகளை கையாளும் சரக்கு கப்பல்களுக்கு உரிமம் பெற அவசியம் இல்லை.
இந்தியர்களும் இத்தகைய கப்பல்களை இயக்க அனுமதிக்கப்படும். துறைமுகம் சார்ந்த நாட்டின் வளர்ச்சிக்கு ரூ. 14 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.