கவுகாத்தி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அருணாச்சல் பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனப் பெருக்கமும், மாநிலத்தில் கலாச்சராமும் பாதிக்கும் என்று பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி 6 ஆண்டுகளாக வசித்து வரும் சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

ஹஜோங்ஸ் (இந்து), திபெத்தியர்கள், சீக்கியர்கள், சாக்மாஸ் (புத்த மதம்), ஜெயின்ஸ், பார்சிஸ், கிறிஸ்தவம் ஆகிய சிறுபான்மை மதங்களும் அடங்கும். இதில் பங்களாதேஷ் சிட்டகோங் மலைப் பகுதியில் 1960ம் ஆண்டில் நடந்த மத துன்புறுத்தல் காரணமாக வெளியேறியவர்கள் அருணாச்சல் பிரதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு மாநில அரசு இடம் ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது.

குடியுரிமை சட்ட திருத்ததால் மாநிலத்தின் இன பெருக்கம் பாதிக்கும். அதோடு மாநிலத்தின் கலாச்சாரமும், வளங்களும் அழியும் என்று பழங்குடியின மாநிலமான அருணாச்சல் பிரதேச மக்களும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அஸ்ஸாம், மேகாலயாவில் போராட்டம் வெடித்தது.

மேகாலயாவில் முதல்வர் சங்கமா தலைமையிலான அமைச்சரவை வெளிப்படையான எதிர்ப்பை காட்டியது. அருணாச்சல் பிரதேசத்தில் மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியும், மாநில பாஜக.வும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அகதிளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2015ம் ஆண்டில் உத்தரவிட்டது. வரையறை செய்யப்பட்ட சலுகைகளுடன் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் மூலம் அகதிகள் பயணம் மற்றும் பணிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.