அட்லாண்டா
ஆங்கில ஆசிரியை ஒருவருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எழுதிய பதில் கடிதத்தில் இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருந்ததாக ஆசிரியை தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஃப்ளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் மரணம் அடைந்தனர். அது குறித்து அட்லாண்டாவை சேர்ந்த ஆங்கில ஆசிரியை ஒருவர் அதிபர் ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் ட்ரம்ப் ஒவ்வொரு மாணவரின் குடும்பத்தினரையும் தனித்தனியே சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கோரி இருந்தார். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியை கண்டறிய விசாரணை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆசிரியைக்கு ட்ரம்ப் தரப்பில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் விசாரணை குறித்த தகவல்கள் ஓரளவு இருந்தன. ஆனால் இந்த கொலை குறித்த எந்த ஒரு வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் ஏராளமான இலக்கணப் பிழைகள் உள்ளன. இந்த கடிதத்தை திருத்தி தன் முகநூலில் பதிந்த ஆசிரியை அந்த திருத்தப்பட்ட கடிதத்தை அதிபருக்கு அனுப்பி உள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில், “இதுவரை எத்தனையோ அரசியல் தலைவர்களுக்கு நான் கடிதம் அனுப்பி பதிலும் பெற்றுள்ளேன். இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் இவ்வளவு மோசமான ஆங்கிலத்தில் எனக்கு பதில் அளித்ததில்லை. ஒரு நாட்டை ஆளும் தலைவர் தான் அனுப்பும் கடிதத்தில் உள்ள இலக்கணப் பிழைகளைக் கூட தெரியாத அளவு அறிவு கொண்டிருப்பது வருந்தத் தக்கது. ட்ரம்பின் இலக்கண அறிவு மிகவும் மோசமாக உள்ளது” என பதிந்துள்ளார்.