டில்லி:

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவ மாணவிகளிடம் விண்ணப்ப கட்டணம் பெறுவதில் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2018-19-ம் ஆண்டு மருத்துவ  மாணவர் சேர்க்கைக்கான நீட்தேர்வுக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பக் கட்டணம்,  பொதுப்பிரிவினர் மற்றும்  பிற்படுத்தப்பட்டவர்கள் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்கள்(MBC) ரூ.1400/- என்றும்,  தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள்(SC/ST) ரூ.750 ஆகவும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நிர்ணயித்திருந்தது.

இந்த விண்ணப்பட்ட கட்டணம் அதிகம் என்றும் சாமானிய மக்கள் இந்த கட்டணத்தை செலுத்த முடியாது என எதிர்ப்புகள் வந்த நிலையிலும் சிபிஎஸ்இ கட்டணத்தை குறைக்க மறுத்துவந்தது.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் இந்த ஆண்டு (2018) நடைபெற்று முடிந்த  நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம் மூலமாக சிபிஎஸ்இக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்பதை தெரிவிக்கும்படி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் சிபிஎஸ்இ கல்வி வாரியத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ள சிபிஎஸ்இ கல்வி வாரியம், 2018ம் ஆண்டு நீட் விண்ணப்ப கட்டணத்தின் மூலம்  ரூ.168.45 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

மாணவர்களின் கல்விக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு அரசு கல்வி நிறுவனம் வருமானத்தை குறிக்கோளாக கொண்டு, விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் பணத்தை பிடுங்கி வந்தது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டாவது சிபிஎஸ்இ விண்ணப்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.