பனாஜி
வரும் 2019 தேர்தல் பிரசாரத்தில் இந்துத்வாவை பாஜக முன்னெடுக்காது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள 2019 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அலை மிகவும் பலமடைந்து வருகிறது. சிறுபான்மையினர் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்கள் பாதுகாப்பில்லாததாக உணர்வதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆளும் பாஜக இந்துத்வாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பரவலாக புகார்கள் எழுந்துள்ள்ன. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கோவாவில் செய்தியாளர்கள சந்தித்தார்.
அப்போது முக்தார் அப்பாஸ் நக்வி, “வரப்போகும் 2019 பொதுத் தேர்தலில் மோடி தனிப்பெரும்பான்மை பெறுவார். அவருடைய ஒரே குறிக்கோள் நாட்டின் முன்னேற்றம் மட்டுமே ஆகும். ஆனால் அவருக்கு எதிரான அணியில் உட்கட்சி மோதலும் ஊழலும் மட்டுமே நிறைந்துள்ளது. இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்னும் பொய் பிரச்சாரத்தை அந்த அணி மேற்கொண்டுள்ளது.
உண்மையில் இந்த அரசு சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்கள் அறிவித்து நடத்தி வருகிறது. வறுமையில் வாடும் சிறுபான்மையினருக்கு நலத் திட்டங்கள் அவர்கள் இல்லத்தின் வாயிற்படியில் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. சிறுபான்மையினரின் அமைதியை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகிறது. நாட்டில் எங்கேயோ நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளை பெரிதாக்கி அரசு இந்துத்வாவை முன்னிறுத்துவதாக கூறி வருகிறது.
வரப்போகும் 2019 தேர்தலில் பாஜக இந்துத்வாவையோ அல்லது ஆலயம் அமைப்பது பற்றிய விவகாரங்களையோ நிச்சயம் முன்னிறுத்தாது. பாஜகவின் ஒரே பிரச்சாரம் முன்னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் மட்டுமே. எனவே சிறுபான்மையினரை தேவையின்றி எதிர்க்கட்சிகள் பயமுறுத்த வேண்டாம்.
உலகில் உள்ள நாடுகளில் இந்தியாவில் மட்டுமே சிறுபான்மையினர் பத்திரமாக உள்ளனர். அவர்களை வாக்கு வங்கிகளாக நினைக்கும் எதிர்க்கட்சிகள் அவர்களிடையே அச்சத்தை உண்டாக்குகிறது. இனி அவ்வாறு செய்வோர் மீது சட்டம் பாயும். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.” என கூறி உள்ளார்.