டில்லி:

னாதிபதி ராம்நாத் கோவிந்த்  தலைமையில் கவர்னர்கள் 2 நாள் மாநாடு  இன்று ஜனாதிபதி மாளிகையில்  தொடங்கியது. இதில் துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் 2 நாள் மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி,  அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்றுள்ள  49-வது ஆளுநர்கள்  மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியது. 6 அமர்வுகளாக இந்த மாநாடு 2 நாட்கள் நடெபற உள்ளது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றுகிறார்.  அதைத் தொடர்ந்து நடைபெற உள்ள 2வது அமர்வில்,   மத்திய அரசின் முக்கிய நல திட்டங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொகுத்து வழங்குகின்றனர்.  பிரதமர் மோடியும் இந்த அமர்வில் உரை நிகழ்த்த உள்ளார்.

தொடர்ந்து 3வது அமர்வில், மாநில பல்கலைக்கழங்களின் உயர்கல்வி குறித்தும், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்த அமர்வை, மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தொகுத்து வழங்க உள்ளார்.

4வது அமர்வில்,மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்கள் ‘ராஜ்யபால்- விகாஸ் கே ராஜ்தூத்’ எனப்படும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆளுனர்களின் பங்கு என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இத்துடன் இன்றைய நிகழ்வுகள் முடிவுபெறுகிறது. அதைத்தொடர்ந்து நாளை 5வது அமர்வு நடைபெற உள்ளது. இந்த அமர்வில்,மகாத்மா காந்தியின் 150வது நினைவு தினத்தை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இறுதியாக நடைபெற உள்ள 6வது அமர்வில் மீண்டும்  ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். அவருடன்  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் கலந்துகொண்டு முக்கிய உரை ஆற்ற இருப்பதாக கூறப்படுகிறது.