தூத்துக்குடியில் பல்வேறு விதிமுறை மீறல்களை மீறி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு காரணம் நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும், வேதாந்தா குழுமத்துக்கும் இடையே உள்ள தொடர்பு தான் என தனக்கு சந்தேகம் எழுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

<தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சீதாராம் யெச்சூரி இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விதிமுறைகளை மீறி துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருக்கிறது.  இதற்கு காரணமான மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்

மேலும், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை பலவீனமானது.   பல விதிமுறைகளை மீறிய பின்னரும் இன்று வரை வேதாந்தா நிறுவனம் செயல்பட அனுமதிக்கப்படுவதற்கு, வேதாந்தா குழுமத்துக்கு – ஆளும் கட்சிகளுடன் இருக்கும் வலுவான தொடர்பு தான் காரணம் என சந்தேகிக்கிறேன். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த வெளிநாட்டு நிறுவனங்களில், 2014க்கு பிறகு பாரதிய ஜனதாவுக்கு அதிக அளவில் நன்கொடை அளித்த நிறுவனம் வேதாந்தா. எப்படி இந்த தொடர்பு”   என்றும் யச்சூரி கேள்வி எழுப்பினார்