தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறி போராட்டக்கார்களை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட 65 பேரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, 65 பேரையும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி சாரு ஹாசினி உத்தரவிட்டார்.
அதோடு விசாரணையின் போது கூடுதல் எஸ்.பி.யை நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறுமாறு அவர் உத்தரவிட்டார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல்களின் கோரிக்கை ஏற்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீதிபதி சாரு ஹாசினி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு மக்கள், வக்கீல்கள் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.