டில்லி:

2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கூறுகையில், ‘‘வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் விரும்பவில்லை.

2015-ம் ஆண்டு சட்டமன்றப தேர்தலில் 56-57 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, 2017-ம் ஆண்டு நடந்த டில்லி நகராட்சி தேர்தலில் 26 சதவீதம் வாக்குகளை தான் வாங்கியது. அதேசமயம் 9.5 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த பொது தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற ரஜோரி கார்டன், பாவனா சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. டில்லியில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு சரிந்து விட்டது. இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதனால் 2019- பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் உடன்பாடு கிடையாது’’ என்றார்.