ஸ்ரீநகர்:
பாதுகாப்பு காரணமாக காஷ்மீரில் நேற்று இரவு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய காஷ்மீர் பகுதியில் இணையதள சேவைவும் முடக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இன்று பொதுவேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமீப காலமாக ராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதை கண்டித்து காஷ்மீர் பகுதிகளில் பொது வேலை நிறுத்தத்துக்கு போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத தளங்களை அவமதித்தல், ஜாமியா மஸ்ஜித் பகுதிகளில் தேவையில்லாமல் அதிகப்படைகளை நிறுத்தி வைத்தல் போன்ற செயல்களையும் கண்டித்து இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
நேற்றிரவு முதல் தெற்கு காஷ்மீர் பகுதியில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக பாட்காம், ஸ்ரீ நகர், அனந்த்நாக், காசிகுந்த் லிருந்து பானிஹாலிற்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மற்றும் வடக்கு காஷ்மீர் பகுதிகளிலும் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்ஹட்டா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய காஷ்மீர் பகுதியில் இணையதள சேவையும், துண்டிக்கப்பட்டுள்ளது.