‘காலா’ படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று (ஜூன் 1) யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்க  பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது.

மும்பை வாழ் தமிழர்களைப் பற்றிய கதைதான் காலா. இதில் ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானே படேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில்  இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் காலா பட மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகி உள்ளது. இதில், செட்டுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன; படப்பிடிப்பு எவ்வாறு நடந்தது என்பவை குறித்து படத்தின் ஆர்ட் டைரக்டர் மற்றும் இயக்குநர் பகிர்ந்துகொள்கிறார்கள்.

சுமார் 5 நிமிடத்துக்கும் மேல் ஓடும் இந்த வீடியோவைத் தற்போது பலரும் பார்த்து வருகின்றனர். மேலும் காலாவின் இரண்டு புரோமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் படம் குறித்துப் பேசியுள்ள பா.ரஞ்சித், “ஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கத்துக்கும் எனக்கும் ஓவியக்கல்லூரியில் இருந்தே பழக்கம் உண்டு.. வருங்காலத்தில் படம் எடுக்கும்போது இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று அப்போதே சொல்லியிருந்தேன்.  அதுபோல அட்டக்கத்தியில் இருந்து காலா வரை அவருடன் இணைந்து பயனிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கம், “ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சேரிப்பகுதியான தாராவியை முடிந்த அளவுக்கு அப்படியே செட்டில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். தாராவியில் பல காட்சிகளை டமாக்க முடியாததால் அதே போன்று செட் போட்டு படமாக்கியுள்ளோம். மேலும், யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவித்துள்ள மும்பையின் வண்ணாந்துறையையும் அப்படியே செட் போட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

https://www.youtube.com/watch?time_continue=309&v=XZKMfZvQ5gg