அகமதாபாத்
வறுமை நிலையில் உள்ளோர் சலுகைகளைப் பெற சாதி சான்றிதழ் அவசியம் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் அரசு சாதி அடிப்படையில் பின் தங்கியோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு பல சலுகைகள் வழங்கி வருகிறது. அது மட்டும் இன்றி பொருளாதார அடிப்படையில் பின் தங்கி உள்ளோருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பல இடங்களில் சலுகை அளித்து வருகிறது. இவ்வாறு பொருளாதார அடிப்படையில் பின் தங்கி உள்ளோருக்கான சலுகையில் ஒரு சில விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி இவ்வாறு சலுகை பெற விரும்புவோர் தங்களின் சாதி மற்றும் தங்களின் இரத்த சம்பந்தமான உறவினர்களின் சாதி குறித்த சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முன்னேற்ற அதிகாரி, தாசில்தார், தாலுகா முன்னேற்ற அதிகாரி போன்றோரிடம் இருந்து பெற வேண்டும். இதற்காக அரசு ஏற்கனவே ஒரு மாதிரியை அளித்துள்ளது. அதே அடிப்படையில் இந்த சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்
அத்துடன் இருப்பிட சான்றிதழையும் உடன் இணைக்க வேண்டும். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுவதால் இருப்பிட சான்றிதழும் அவசியமாகும். மேலும் ஏற்கனவே சாதி அடிப்படையில் சலுகைகள் பெறுபவர்கள் இந்த பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான சலுகைகள் பெற தகுதி அற்றவர்கள் ஆவார்கள். அதனால் சாதி சான்றிதழும் இருப்பிட சான்றிதழும் அவசியம் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.