சென்னை:
சுங்கச்சாவடி உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, வேல்முருகன் புழல் சிறையில் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்றபோது, கடந்த 25ம் தேதி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து உண்ணவிரதம் மேற்கொண்டார். அவரை வைகோ சந்தித்து வேண்டியதை தொடர்ந்து உண்ணவிரதத்தை கைவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில், நேற்று அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி நெய்வேலியில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் காவிரி பிரச்சனைக்காக நடந்த போராட்டம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனை, நீர் சத்து குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து வேலமுருகன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தம்மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் உண்ணாவிரதம் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த தம்மை கட்டாயமாக போலீசார் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
காவிரி வாரியம் கோரி அமைதியான முறையில் போராடிய என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறிய வேல்முருகன், தன்னை தூத்துக்குடியில் கைது செய்து பாழடைந்த கட்டடத்தில் உணவு, நீர் தராமல் என்னை கொடுமைப்படுத்தினர் உணவு அருந்தாததாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் என் உடல் சோர்ந்து விட்டது என்றும் கூறினார்.