சென்னை:
திமுக சார்பில் இன்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எம்எல்ஏக்களை மக்கள் தேர்ந்தெடுத்தது சட்டமன்றத்திற்குத்தான், போட்டி கூட்டத்திற்கு அல்ல என்றும், போட்டி சட்டப்பேரவை நடத்துவது என்பது விளையாட்டானது என்றும் கூறி உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன், ஒரு நடிகராக ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை என்று கூறினார்.
நேற்று சட்டசபையில் பங்கேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஸ்டெர்லைட் பிரச்சனையை காரணம் காட்டி தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக கூறியிருப்பது நல்ல விஷயமாக தெரியவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை மட்டும் பிறப்பித்தால் போதாது. அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காரணம் கூறி இருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் தாமிர ஆலை தேவையில்லை என்று அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி சட்டம் கொண்டு வந்தால் தான் நிரந்தரமாக காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க முடியாமல் போகும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டில் தொழிற்சாலையினர் அப்பீல் செய்து ஆலையை இயங்க அனுமதி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்து வாதாட வேண்டும். மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டசபைக்குள் வந்து பேசுவதற்கு தான் போட்டி கூட்டத்தில் பேசுவதற்கு அல்ல. போட்டி சட்டமன்றம் விளையாட்டானது. நாளையே சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவை புறக்கணிப்பு ஆளும் அரசுக்கு சாதகமாக அமையும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிப்பு தற்காலிக முடிவுதான். ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக அவசரச்சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்