சென்னை:

ழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய துணைவேந்தர் நியமனத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, புதிய துணைவேந்தராக சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய  சுபாஷ் சந்திரபோசை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யக்கூடாது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் புகாருக்கு ஆளான ஒருவரை  ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக 3 பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஊழல் புகாருக்குள்ளான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, பிகார் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்மரெட்டி தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட தேடல் குழு 3 மாதங்களுக்கு முன், அதாவது 03.06.2018 அன்று அமைக்கப் பட்டது.

அக்குழு சில நாட்களுக்கு முன் வேந்தரிடம் அளித்த பட்டியலில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் சுபாஷ் சந்திரபோஸ், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களிடம் ஆளுநர் நேர்காணல் நடத்தி, தகுதியான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், நேர்காணல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே சுபாஷ் சந்திர போசை புதிய துணைவேந்தராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டு, அதுகுறித்த தகவல் அவருக்கு அதிகாரப்பூர்மற்ற வகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

துணைவேந்தர் பதவிக்கான நேர்காணல் கண்துடைப்பு என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்படவுள்ள பேராசிரியர் சுபாஷ் சந்திரபோசின் கடந்த காலம் சர்ச்சைகள் நிறைந்தது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார்.

அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிக்கான ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான முனைவர் சுபாஷ் சந்திர போஸ் தான் இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக நியமிக்கப்படவுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவுக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் நெருங்கிய உறவு உண்டு. சுப்பையாவின் செல்வாக்கால் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் தேர்தலில் வெற்றி பெற்ற சுபாஷ் சந்திர போஸ், செனட் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இப்போதும் சுப்பையா ஓய்வு பெறும் நிலையில், அடுத்து அந்த பதவிக்கு வருபவர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்களை தோண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுபாஷ் சந்திர போசை இந்த பதவியில் அமர்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுப்பையாவே செய்ததாக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றஞ்சாற்றுகின்றனர். இந்தக் குற்றச்சாற்றை எளிதாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்கள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அழகப்பா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை. துணைவேந்தர் பதவிக்கு 160 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அவர்களில் சுபாஷ் சந்திர போஸ், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேல்முருகன், திலகராஜ், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் அன்பழகன், ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட 10 பேர் இரண்டாம் கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து சுபாஷ் சந்திர போஸ், வேல்முருகன் ஆகியோர் மூன்றாம் கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து எந்த விளக்கத்தையும் தேடல் குழு அறிவிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, 3 பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்வதற்கான தேடல் குழுவின் கூட்டம் சில நாட்களுக்கு முன் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. யாருடைய திட்டப்படி, யாருடைய செலவில் நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. சென்னையில் ஆளுநர் மாளிகை, உயர்கல்வி மாமன்றம், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், சென்னை பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தேடல் குழு கூட்டம் நடத்துவதற்கு ஏற்ற அரங்கங்கள் உள்ளன. அதை விடுத்து நட்சத்திர விடுதியில் கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? தேடல் குழு உறுப்பினர்களாக இருந்த பேராசிரியர்கள் ராஜேந்திரன், செல்லப்பன் ஆகியோர் அழகப்பா பல்கலை. தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் ஆலோசனைப்படியே செயல்பட்டதாக கூறப்படுவது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தின் போதும் தூய்மையானவர்களை நியமிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அதை மதிக்காமல் பல்வேறு முறைகேடுகளில் சிக்கியவரும், குற்றப்பின்னணி கொண்டவருமான செல்லத்துரையை நியமித்தனர்.

அதன்விளைவு இப்போது நிர்மலாதேவி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் பல்கலைக்கழகம் சிக்கித் தவிக்கிறது. அதே போன்ற அவலம் அழகப்பா பல்கலைக்கும் நேரக் கூடாது.

அழகப்பா பல்கலைக்கழகம் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதன் துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டும். தேர்வு முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் சிக்கிய ஒருவரை துணைவேந்தராக நியமிக்கக் கூடாது.

எனவே, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் சுபாஷ் சந்திரபோசை நியமிக்கும் முடிவை கைவிட்டு, தகுதியும், திறமையும் கொண்ட, அப்பழுக்கற்ற ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தமிழக ஆளுநர் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.