சென்னை:

துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது, சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன், தூத்துக்குடி சம்பவத்திற்கு அரசின் இயலாமையே காரணம் என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற உள்ளது..  இந்த ஆண்டில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும்.

இன்று தொடங்கிய இந்த கூட்டத்திதொடரின் முதல் நாளிலேயே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு தூத்துக்குடி சம்பவங்களை கையிலெடுத்து பேசின. திமுக தனது பங்குக்கு எப்போதும்போல அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துவிட்டது.

அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை வாசித்தார். அதில் திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்,சபையில் பேசிய டிடிவி தினகரன், சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து சபைக்கு வெளியே  செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  மக்கள் போராட்டத்தினுடே  சமூக விரோதிகள் நுழைந்ததை பார்க்காமல் தூங்கிவிட்டது அரசு. துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது. மக்கள் இடத்திலிருந்துதானே எதையும் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொல்லாமல் எல்லாரும் கண்ணை மூடி படுத்துக் கிடக்கின்றனர் என்றா சொல்ல முடியும், ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருக்குமா,  13 பேர் பலியாகியிருந்திருப்பார்களா என்று கேள்வி எழுப்பிய டிடிவி,  ஜெயலலிதா வழியில் ஆட்சி என்று கூற அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

காவல்துறை துணையின்றி அமைச்சர்கள் தூத்துக்குடிக்கு போக முடியுமா என்ற டிடிவி, சட்டமன்றத்தில். புகைப்படங்களை காட்டி முதல்வர் ஷோ காட்டி வருகிறார். போராட்டத்துக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்க வேண்டியதுதானே. 13 பேரை காவு வாங்கிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுகின்றனர் என்றும் தினகரன் தெரிவித்தார்.