சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி காந்தை, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ. கு.தமிழரசன் நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்து பேசினார்.

தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போது, தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி, தனது படத்தையும் வெற்றிப்படமாக்கி வருகிறார். இந்த நிலையில், ரஜினி யின் காலா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

ரஜினியின் ரசிகர் மன்றத்தை  ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றிய ரஜினி, 6 மாதங்களில் சட்டசபை  தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்று பரபரப்பாக கூறி,  ஒருசில மாவட்டங்களுக்கு மட்டுமே நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துவிட்டு மீண்டும் மவுனமாக இருக்கிறார்.

இந்த நிலையில், இன்று காலை  இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன்  நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, ரஜினி  தனது அரசியல் பிரவேசம், கொள்கை, திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செ.கு.தமிழரசன், ரஜினி  ஏற்கனவே அறிவித்தபடி ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார் என்று கூறினார். தமிழகத்தில் திரைப்பட நடிகராக மக்களிடையே செல்வாக்கை பெற்றிருப்பவர் ரஜினிகாந்த் என்றவர், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல புகழ்பெற்றவராக ரஜினி உள்ளதாகவும் கூறினார்.

செய்தியாளர்கள், எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழரசன்,  அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்யக் கூடாது,  அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தமிழக குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அதிமுகவின் ஆதரவு கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.