தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தூத்துக்குடி  துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய  துணை முதல்வர் ஓபிஎஸ்  கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, 13 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே போராடி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து 4 நாட்களுக்கு பிறகு கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி, எகத்தாளமாக பதில் கூறியிருந்தார். இது தமிழக மக்களிடையே குறிப்பாக தூத்துக்குடி மக்களிடையே மீண்டும் கோபத்தை கிளறியது.

இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் தற்போது  அமைதி திரும்பி மக்களின்  இயல்பு வாழ்க்கை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடிக்கு  வந்துள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தூத்துக்குடி கலெக்டர் சந்திப் நந்தூரி உள்பட அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பலர் அரசு மருத்துவ மனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,  தூத்துக்குடி சம்பவம் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது என்று கூறினார. அவர்களுக்கு  அரசின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்  என்ற ஓபிஎஸ், காயமடைந்த 47 பேரை சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் நலம் பெற்று திரும்புவார்கள் என்று கூறியவர், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது என்றும், தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி உள்ளது..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, நிரந்தரமாக மூடப்படும் என்றும் கூறினார்.