நெய்வேலி:
என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிர்வாகத்திற்கு எதிராக இன்று காலை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மத்தியஅரசுக்கு சொந்தமான நிலக்கரி வெட்டி எடுக்கும் நிறுவனத்தில் பணிபுரியும், சுரங்கம் 1- ஏ ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை நிர்வாகம் குறைத்து வருவதை எதிர்த்தம், பணியிட மாற்றம் செய்யாமல், ஒரே இடத்திலேயே பணி வழங்கக் கோரியும் சுரங்கம் 1 ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்த வந்தனர்.
அப்போது, சுமார் 25 தொழில6ளர்கள் சிலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயற்சித்த 25 பேரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும், நிலக்கரி சுரங்கத்திற்கான தங்களது இடங்களை வழங்கியதற்காக, ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.