சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரி சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராயினர். அவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தனித்தனியாக குறுக்கு விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகளும், பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக்-கும் வழங்கப்பட்டுள்ளது. அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தனக்கு என்ன வகை உணவுகள் தேவை என ஜெயலலிதாவே அவர் கைப்பட எழுதியதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை மருத்துவர் சிவக்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதில், அவருக்கு தேவையான உணவு வகைகளும், அவரது எடை உள்ளிட்ட சில குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஜெயலலிதாவே கைப்பட எழுதியதாக அவர் தெரிவித்தார்.