டில்லி:
காப்பர் உருக்கு ஆலையை தூத்துக்குடிக்கு வெளியில் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேதாந்த நிறுவன சிஇஓ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தூத்துக்குடி காப்பர் உருக்காலை விரைவில் மீண்டும் செயல்பட தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தூத்துக்குடிக்கு வெளியில் உருக்காலை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆலை விஸ்தரிப்பு பணி திட்டமிட்டபடி நடைபெறும்.
தற்போதுள்ள பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவோம். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்று சூழலுக்கு பாதிப்பு என்பது யூகத்தின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது. அதனால் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கும். உற்பத்தியின் அளவும் இரட்டிப்பாக்கப்படும். உள்ளூர் மக்களுடன் இனக்கமான உறவு ஏற்படுத்தப்பட்டு உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் காற்று, நீர் வளம் பாதிக்கப்படுகிறது. சுவாச பிரச்னை, தோல் நோய், இருதய பாதிப்பு மற்றும் புற்று நோய் ஆகியவை ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 4.38 லட்சம் டன் காப்பர் உருக்கும் திறன் உள்ளது. தினமும் ஆயிரத்து 200 உருக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.