ரஜினியின் “காலா” பட வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்படும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
ரஜினி நடித்து ஷங்கர் இயக்கும் 2.0 திரைப்படம்தான் முதிலில் வெளியாகும் என்றும் அதற்குப் பிறகு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தொழில் நுட்ப காரணங்களால் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்த நிலையில் காலா ரிலீஸ் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்தன. ஒருகட்டத்தில் கடந்த கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனஆல் திரைப்படத்தயாரிப்பாளர் தரப்பினர் நடத்திய வேலை நிறுத்தத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது.
பிறகு காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், ஜூன் 7ம் தேதி காலா வெளியாகும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் காலா ரிலீஸ் தள்ளிப்போகும் என்று ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது.
“தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதை அடுத்து தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது தமிழகம் முழுதுமே ஒருவித இறுக்கமான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சில விழாக்களும்கூட தள்ளிவைக்கப்படுகின்றன. ஆகவே இந்த சூழலில் படத்தின் ரிலீஸ் வேண்டாம் என ரஜினி உட்பட படக்குழுவினர் எண்ணுகிறார்கள். ஆகவே படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து ரஜினி பேசியிருக்கிறார். ஆகவே வழக்கம்போல அவரது படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சில கன்னட அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. இதனாலும் பட வெளியீட்டை கொஞ்சம் தள்ளிப்போட ரஜினி நினைக்கிறார்.
தவிர இடையில் நடந்த திரையுலக ஸ்டிரைக் காரணமாக இன்னமும் சில திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. காலா வெளியிட்டால் அப்படங்களின் வெளியீடு மேலும் தாமதமாகும். ஆகவே சிறு படங்களுக்கு வழிவிட்டு, காலா ரிலீஸை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.