தூத்துக்குடி:
கடந்த 22ந்தேதி தூத்துக்குடியில் மக்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராட்டித் தனமான துப்பாக்கி சூட்டில் மாணவி, பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கலெக்டடர் சந்திப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக பொதுமக்களிடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை பார்வையிட்ட கலெக்டர் சந்திப், 22ந்தேதி நடை பெற்ற போராட்டத்தின் போது 102 பேர் காயமடைந்ததாகவும், இவர்களில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் தரப்பிலும் 10 பெண்கள் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறினார். தற்போது தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும் போன்ற கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நகரில், படிப்படியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.