நியூஸ்பாண்ட் அனுப்பிய அவசர வாட்ஸ்அப் தகவல்:
சில மாநிலங்களில் பிற கட்சிகளை பிளவுபடுத்தி, எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சி அமைத்தது பாரதீய ஜனதா கட்சி. ஆனால் அக் கட்சியின் முக்கிய மாநிலம் என்று கூறப்படும் குஜராத்தில் அதே நிலை பாஜகவுக்கு ஏற்பட இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, குஜராத் துணை முதல்வர் நித்தின் பட்டேல் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் கட்சியில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறது.
ஆகவே நித்தின் பட்டேல் (காங்கிரஸ் ஆதரவுடன்) ஆட்சி அமைக்க இருக்கிறார் என்பதுதான் தகவல்.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் நித்தின் பட்டேல். மோடி பிரதமரான நிலையில், “கட்சி அனுமதித்தால் முதல்வராவேன்” என்று வெளிப்படையாக நித்தின் தெரிவித்தார். ஆனால் அவரது ஆசையை கட்சித் தலைமை புறம்தள்ளியது.
அப்போதிலிருந்தே நித்தினுக்கும் அமித்ஷாவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதற்கிடையே நித்தின் துணை முதல்வர் ஆக்கப்பட்டாலும் இந்த புகைச்சல் தொடர்ந்தது.
தவிர குஜராத் முதல்வர் விஜய் ருபானிக்கும், நித்தினுக்கும் சில விசயங்களில் விவகாரம் வெடித்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கட்சியைவிட்டு வெளியேறி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டிருக்கிறாராம் நித்தின்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பின்னடவை சந்தித்து. ஆனாலும் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் ஆட்சியும் பறிபோனால், பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.