அகமதாபாத்
பிட் காயின் வழக்கில் பாஜக தலைவர்களின் தவறுகளை மறைக்க அந்த வழக்கை அரசு தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பல அரசியல்வாதிகள் தங்கள் பணத்தை பிட்காயின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தன. பிட் காயின் என்பது கணினி முறை பண வர்த்தகத்தின் ஒரு வகை முறையாகும் இதை ஒட்டி வழக்கு தொடரப்பட்டு விசாரணையை குஜராத் அரசு நடத்தி வருகிறது.
குஜராத் மாநில காங்கிரஸ் பிரமுகரும் எதிர்க்கட்சித் தலைவருமான பரேஷ் தனானி இது குறித்து, “பிட் காயின் வழக்கில் பல பாஜக தலைவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். ரூ.12 கோடி ஊழல் பணத்தை பிட்காயினில் முதலீடு செய்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அந்த முதலீடு ரூ.2000 கோடி என கூறப்படுகிறது. வழக்கை நடத்த வேண்டிய அரசு வழக்கை தாமதப் படுத்தி வருகிறது.
பாஜக தலைவர்களின் தவறுகளை மூடி மறைக்கவே அரசு இவ்வாறு நடந்துக் கொள்கிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கு எதிராக உள்ள அரசு இப்போது தனது கட்சி தலைவர்களைக் காப்பாற்ற இது போல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை உருவாக்க காங்கிரஸ் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் உள்துறை அமைச்சர் பிரதிப்சிங் ஜடேஜா, “இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே இது குறித்து விசாரிக்க சிஐடி காவல்துறையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்த எந்த ஒரு தலைவரையும் அல்லது அதிகாரிகளையும் நிச்சயம் அரசு தண்டிக்கும்” என கூறி உள்ளார்.