வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபருடன் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கொரியாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சம்மதம் தெரிவித்திருந்தார். இதற்காக அணு ஆயுது ஏவுதளங்களையும் அவர் அளித்த வீடியோக்களை வெளியிட்டார். ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ இந்த சந்திப்பு மூலம் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வட கொரியாவின் சமீபத்திய சில அறிக்கைகளில் மிகப்பெரிய கோபமும், வெளிப்படையான விரோதமும் நிறைந்ததாக உள்ளது. அதனால் தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது உகந்த நேரமாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படலாம் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்திருந்தார். முன்னதாக தென் கொரியாவுடன் அமெரிக்க ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதனால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று வட கொரியா மிரட்டல் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்தே டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.