தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை அனைத்துக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த தூத்துக்குடி மக்கள் மீது செவ்வாய், புதன் கிழமைகளில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 போ் கொல்லப்பட்டனா். மேலும் பலா் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு, காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (புதன் கிழமை) முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம்., சி.பி.ஐ., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.