பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் வெளியிட்டார். 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்த அவர், கடந்த வருடத்தைவிட இந்த முறை 0.1 சதவிகித தேர்ச்சி அதிகரித்துள்ளதாக கூறினார்.
மாணவியர் 96.4 சதவிகித தேர்ச்சியும் மாணவர்கள் 92.5 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இம்முறை மாணவர்களை விட 3.9 சதவிகித மாணவியர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், “சிவகங்கை மாவட்டம் 98.5 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் 2 மற்றும் 3வது இடம் பிடித்துள்ளன. மொத்தம் 5,584 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. 1,687 அரசுப்பள்ளிகள் 100சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஜூன் 28ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும்.
தோல்வியுற்ற மாணவர்கள் 14417 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு அறிவுரைகளை பெறலாம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்