
சென்னை
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும் அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகை இடச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. இதில் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மற்றும் காயம் அடைந்தோருக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மரணம் அடைந்தோர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]