டில்லி:
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத் துறை ஈடுபட்டு உள்ளது.
கடந்த ஆண்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவரது சொத்துக்களை விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரபல தொழிலதிபரும், கிங்பிஷர் விமான நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளின் அதிபர் விஜய்மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இது தவிர, சட்ட விரோத பண பரிவர்த்தனை, வரி நிலுவை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.
இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய்மல்லையா தற்போது லண்டனில் தலைமறைவாக இருந்து வருகிறார். இது தொடர்பாக நடைபெற்று வழக்கில், விஜய்மல்லையாவின் அனைத்து சொத்துக்களையும் முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்பனை செய்ய அமலாக்கத்துறை இயக்குனரகம் துவங்கியுள்ளது. மல்லையாவின் சொத்துக்களை விற்க கோரி பணமோசடி சட்டம் தடுப்பு பிரிவின்படி நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என்றும், அதைத்தொடர்ந்து விஜய் மல்லையாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
யுனைடெட் ப்ரூவரிஸில் மல்லையாவின் பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.