டில்லி:

டில்லி மற்றும் மும்பையில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் டில்லியில் ரூ.76.57, மும்பையில் ரூ.84.40 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. இந்த இரு நகரங்களிலும் ஞாயிற்றுக் கிழமை அன்று ரூ.76.24 என்றும், ரூ.84.07 என்ற நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்தது. முந்தைய 2013ம் ஆண்டின் அதிகபட்ச உயர்வை இது முறியடித்தது.

கொல்கத்தாவில் ரூ.79.24 என்றும், சென்னையில் ரூ.79.47 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் கண்டிராத அதிகபட்ச உயர்வாகும். இன்று சர்வதேச சந்தையில் ஒரு பாரல் கச்சா எண்ணைய் விலை 79 டாலர் என்ற நிலையில் உள்ளது.

போக்குவரத்துக்கான எரிபொருள் விலை உயர்வு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலையில் எதிரொலித்தது. அதோடு நாட்டில் நிலவும் உயர் கலால் வரி விதிப்பும் ஒரு காரணமாக உள்ளது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வும் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய விலையை அடைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை டில்லியில் ரூ.67.82, கொல்கத்தாவில் ரூ.70.37, மும்பையில் ரூ.72.21, சென்னையில் ரூ.71.59 என்ற நிலையில் உள்ளது.