டில்லி:

ர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி இன்று இரவு அல்லது நாளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ஜேடிஎஸ் – காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட இருப்பதால், இரு கட்சிகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து ராகுல்காந்தியை சந்தித்து பேசி இறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில், முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்முன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், ஜேடிஎஸ் – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவரான குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் வரும் 23ந்தேதி குமாரசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.

இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையே அமைச்சர் பதவிகள் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவி  வருவதாக கூறப்படுகிறது. துணைமுதல்வர் பதவி காங்கிரசுக்கு கொடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் துணைமுதல்வர் பதவி கேட்டுஅடம் பிடிப்பதாகவும், இதன் காரணமாக 2 துணை முதல்வர்கள் பதவி உருவாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், பெரும்பாலான ஜேடிஎஸ் (மதசார்பற்ற ஜனதாதளம்) எம்எல்ஏக்கள் மந்திரி பதவி கேட்டு நச்சரித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இன்றுக்குள் அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும், அதற்காக குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இன்று காலை ராகுலை சந்தித்து கர்நாடகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் ஆட்சி பகிர்வு, மாநில எம்எல்ஏக்களின் கருத்துக்கள் குறித்து தெரிவித்து ஆலேசானை நடத்தினார்.

இந்நிலையில் இன்று மாலை அல்லது நாளை குமாரசாமி டில்லி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது இரு கட்சிகளுக்கிடையேயான  அதிகார பகிர்வு மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டம்  குறித்து இறுதி செய்யப்படும் என்றும், அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படுவது குறித்தும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.