சென்னை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது தெரிந்ததே.   கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சில நாட்கள் மாற்றப்படாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்குப் பின் மீண்டும் ஏறத் தொடங்கி உள்ளது.   தற்போது கச்சா என்ணெய் விலை பாரலுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது.   இதனால் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நேற்று ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேர்று செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “கச்சா எண்ணெய் விலை உயர்வால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறி உள்ளது.  கச்சா எண்ணெய் விலை குறைப்பு என்பது நமது கையில் இல்லை.   மேலும் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்துள்ளது.   விரைவில் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளது.” என தெரிவித்தார்.

அவர் கூறிய அடுத்த நாளான இன்றே மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர்ந்துள்ளது.