சென்னை :
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்க காங்கிரஸ் தலைமையக மான ஜிபி ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் உள்ள அவரது படத்திற்கு தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் விடுதலைப்புலிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டார். உலகத்தையே உலுக்கிய அந்த சம்பவம் இன்னும் தமிழர்களின் மனதில் இருந்து மறையாமல் இருந்து வருகிறது. அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினத்தை நாடு முழுவதும் காங்கிரசார், அவரது படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களும் செய்து வருகின்றனர்.
தமிழகத்திலும் தமிழக காங்கிரசார் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத் துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் உள்பட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் செலுத்தினர். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராஜீவ் நினைவு புகைப்படக் கண்காட்சியையும் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.