டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மாலை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,.

காவிரி தொடர்பான வழக்கில்,நேற்று மத்திய அரசின் திருத்த வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.அதில் மத்திய அரசு காவிரி ஆணையம் என்று பெயரிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மத்தியஅரசு வழக்கறிஞர்,  மேலாண்மை வாரியத்தை விட அதிக அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு. அதனால்தன்   ஆணையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆணையம் என்று பெயர் மாற்றியதால் அதிகாரம் ஏதும் குறையாது என்று மத்திய அரசு கூறினார்.  ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும் வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தண்ணீரை திறந்துவிடும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்று கர்நாடகம் முரண்டு பிடித்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.   இதையடுத்து இந்த விவகாரத்தில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்தது.

அதன்படி இன்று  மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவறும் பட்சத்தில்,    மே 22 அல்லது 23 ம் தேதிகளில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதி மன்றம்  கூறியுள்ளது.