சென்னை:
நடைபெற்று முடிந்த பிளஸ்2 பொதுத்தேர்வில், வினாத்தாள்கள் கடினமாகவும், மத்திய கல்விவாரியம் நடத்தும் வினாத்தாள் போன்று இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதற்கு, நேற்று பிளஸ்2 தேர்வு முடிகள் வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டியதுள்ளது. மாணவ மாணவிகள் எதிர்காலத்தில், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு புதிய முறைப்படி தேர்வுகள் நடத்தப்பட்டது என்று கூறினார். இதன் காரணமாக மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
பிளஸ்2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்கூட பொறியில் படிக்கும்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வில் அரியர்ஸ் வைத்து வருகின்றனர். கணிதப் பாடத்தில் 21 சதவீதம் பேர் அரியர்ஸ் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிலை நீடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் கேள்விகள் கடினமாக வைக்கப்பட்டன என்று விளக்கம் அளித்தார்.
அதே வேளையில் மாணவர்களுக்கிடையே மதிப்பெண்கள் காரணமாக வித்தியாசம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம் ரேங்க் பற்றி விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்பட்ட வருவதாகவும், ஒரு மார்க் குறைந்துவிட்டால்கூட, அந்த மாணவனும் அவரது பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தால் ரேங்க் கூடியிருக்குமே என்றெல்லாம் மற்றவர்கள் கூறி மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் நிலை உள்ளது இதை நிறுத்தவே ரேங்க் முறையை தவிர்த்திருக்கிறோம் என்றார்.
இந்த புதிய நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் இதை பாராட்டியுள்ளனர். எல்லோரையும் சமநிலைப்படுத்தி பாடத்தை கற்றுத் தருவதுதான் அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.