நெல்லை:
தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பிளஸ்2 மாணவன் தினேஷ், நடைபெற்று முடிந்த பிளஸ்2 தேர்வில் 1024 மதிப்பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்களை கண்டு அவரது நண்பர்களும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இவ்வளவு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ள தினேஷ், தாய் இல்லாத நிலையில், தந்தை மாடசாமியின் குடிப்பழக்கம் காரணமாக, தனது வீடு அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ரெயில்வே பாலத்தில் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
அப்போது, தனது உடலுக்கு தந்தை தமக்கு எந்த ஒரு ஈமச்சடங்கும் செய்ய வேண்டாம் எனவும் டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் தான் பேயாக வந்து கடைகளை அடித்து நொறுக்குவேன் எனவும் கடிதம் எழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து தினேஷின் தந்தையும், தான் இனி குடிக்க மாட்டேன் என மகனின் உடல் முன்பு சபதம் எடுத்துள்ளார்.
இந்த சோகமான சூழ்நிலையில் நேற்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் தமிழக்ததில் வெளியானது. இதில் தமிழ் – 194 ஆங்கிலம் – 148 இயற்பியல் – 186 வேதியியல் – 173 உயிரியல் – 129 கணிதம் – 194 மொத்தம் – 1024 மதிப்பெண்கள் பெற்றுளார்.
படிப்பில் கெட்டிக்காரரான தினேஷ் தனது பத்தாம் வகுப்பில் 463/500 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2படிப்பை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். தினேஷின் கனவு மருத்துவராக வேண்டும் என்பதே.
தனது தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தனது கனவையும், வாழ்வையும் தொலைத்துவிட்டார் தினேஷ். தினேஷ் எடுத்துள்ள மார்க்கை பார்த்து அவரது நண்பர்களும், உறவினர்களும் சோகமயத்தில் உள்ளனர்.