டில்லி

முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்.   இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.    அவர் தங்கி இருந்த டில்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிணமாக கிடந்தார்.   அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

டில்லி காவல்துறை இன்று இந்த மரணம் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.   இந்த குற்றப்பத்திரிகை டில்லி மாநகர நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் சிங் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.   இந்தக் குற்றப்பத்திரிகையில் சசி தரூரின்  பெயர் உள்ளது.

சசி தரூர் மீது பெண்ணை கொடுமை செய்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.