காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களில் முக்கியமானவற்றை கீழே பார்ப்போம்.

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசால், 14 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில், ஒரு தலைவர், 9 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பெயரை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். வாரியமா, ஆணையமா, குழுவா என 3 வாய்ப்புகளை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் முன்னால் வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் இதை தீர்மானிக்கும்.

இந்த அமைப்பு வழக்கில் தொடர்புள்ள அனைத்து மாநில அணைகளின் கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும். மேலாண்மை வாரிய செலவை 4 மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் பிப்ரவரி மாதம் அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தனது வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும் என்று இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் காவிரி வரைவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில் முடிவெடுத்தால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டிருந்தது. கடந்த 8ம் தேதி காவிரி பிரச்சினை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும், நேரம் கேட்டது மத்திய அரசு. இதையடுத்து, மே 14ம் தேதி காவிரி வரைவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று மத்திய அரசு சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.