மும்பை
மும்பை காவல்துறையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி கோரி உள்ளார்.
மும்பை மாநகரில் காவல்துறையில் தயானேஸ்வர் என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் விடுப்பு எடுத்துள்ளார். இது தொடர்பாக தாம் பணி புரியும் காவல்நிலையத்துக்கு ஏற்கனவே தகவல் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு இரு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதை ஒட்டி தயானேஸ்வர் மகாராஷ்டிர முதல்வருக்கும் மாநில காவல் ஆணையருக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “நான் என் மனைவியின் உடல் நிலை காரணமாக விடுப்பில் இருக்கிறேன். இது குறித்து முன் கூட்டியே தகவல் அளித்தும் எனக்கு இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது எனது குடும்பச் செலவுக்கும், என் மனைவியின் மருத்துவச் செலவுக்கும் பணம்தேவையாக உள்ளது.
மேலும் நான் மாதாமாதம் வங்கிக் கடனுக்கு பாக்கி செலுத்த வேண்டும். ஊதியம் இல்லாததால் என்னால் எந்த செலவையும் செய்ய முடியவில்லை. எனவே எனக்கு எனது சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கடிதம் மாநிலம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் தயானேஸ்வரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
அவர் பணிபுரியும் காவல் நிலைய அதிகாரி, “தயானேஸ்வர் மார்ச் மாதம் 20-22 தேதி வரை மட்டுமே விடுப்பு அறிவிப்பு அளித்துள்ளார். ஆனால் அவர் திடீரென மார்ச் 28ஆம் தேதி பணிக்கு வந்தார். அதன் பிறகு மீண்டும் வரவில்லை. இது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு துணை காவல்துறை ஆணையர் வசந்த் ஜெய்தேவ். “ இது காவல் துறை நிர்வாகம் சம்மந்தப் பட்டது. எனவே இது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை” என பதில் அளித்துள்ளார்.